மாஞ்சோலை : மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறுத்தம் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. 

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை மலை கிராமங்களில் உள்ள தேயிலைத் தோட்ட நிறுவனங்களின் ஒப்பந்த காலம் 2028 ஆண்டுடன் முடிவடையவுள்ள நிலையில், அங்கு பணியாற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வு கொடுத்து வெளியேற்றும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், அங்கு பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த 20ம் தேதி மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம், அதன் விசாரணை பிரிவின் தலைமை இயக்குநர் அடங்கிய அதிகாரிகளை கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இந்நிலையில், மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் 5 நாள் விசாரணையை இன்று தொடங்கியது. முதற்கட்டமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கார்த்திகேயனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

மாஞ்சோலை விவகாரம் தொடர்பான சம்பவங்கள் குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடைபெற்ற நிலையில், தொடர்ந்து மாஞ்சோலை பகுதியில் தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதன்காரணமாக, மாஞ்சோலைக்கு செல்லக்கூடிய மணிமுத்தாறு வனத்துறை சோதனை சாவடியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் இன்றும், நாளையும் மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Night
Day