எழுத்தின் அளவு: அ+ அ- அ
PM SHRI திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துவிட்டு தற்போது திமுக அரசு மீண்டும் பிரச்சினையை எழுப்புவதாக நாடாளுமன்ற மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. மக்களவையில் தேசிய கல்விக் கொள்கை குறித்து திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்க மத்திய அரசு மறுப்பதாக குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, கல்வி கொள்கையில் இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார். PM SHRI திட்டத்தை ஏற்பதாக கடந்த ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் இதுதொடர்பாக தன்னை சந்தித்ததாக தெரிவித்த தர்மேந்திர பிரதான், PM SHRI திட்டத்தை தமிழக அரசு ஏற்றது கனிமொழிக்கு தெரியும் என்றும், அவர் என்ன நடந்தது என்பதை விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தமிழக மாணவர்களின் கல்வியில் திமுக அரசுக்கு அக்கறை இன்றி வஞ்சிப்பதாகவும், தமிழ் மொழியை வைத்து திமுக அரசு அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டிய தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் சூப்பர் முதலமைச்சர் யார் என்றும் கேள்வி எழுப்பினார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.