எழுத்தின் அளவு: அ+ அ- அ
வரும் மக்களவைத் தேர்தலில் 40 முதல் 50 இடங்களாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாஜக 400 இடங்களில் வெற்றி பெற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆசிர்வதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி சிந்தனையின் அடிப்படையில் காலாவதியாகிவிட்டது என்றும், இந்தியாவை ஆண்ட இவ்வளவு பெரிய கட்சி அதலபாதளத்திற்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பா.ஜ.க. கூட்டணிக்கு 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற மல்லிகார்ஜுன கார்கே ஆசிர்வதித்துள்ளார் என்று குறிப்பிட்ட பிரததமர் மோடி, வரும் தேர்தலில் 40 முதல் 50 இடங்களாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், நாட்டு மக்கள் பாஜகவின் பேச்சை கேட்க முடிவு செய்துவிட்டார்கள் என்று உறுதிப்பட கூறினார்.
காலாவதியாகி வரும் காங்கிரசால் அதன் தலைவர்களுக்கே உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை என்றும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது எமர்ஜென்சி உட்பட எண்ணற்ற ஒடுக்குமுறைகள் நடந்ததாகவும் பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.
நக்சலைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு காங்கிரஸ் ஆட்சியாளர்களே காரணம் என சாடிய பிரதமர் மோடி, நாட்டை வடக்கு, தெற்கு என காங்கிரஸ் பிரித்தாள நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 12-வது இடத்திற்கு பின்னடைந்திருந்த நிலையில், பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.