எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடு கடத்தப்படும் இந்தியர்களை எந்த வகையிலும் தவறாக நடத்தக் கூடாது என்று அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டு அவமதிக்கப்ட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க் கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எதிர்க் கட்சிகள் முழக்கங்கள் எழுப்பியதால் பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்ட்டன.
இந்நிலையில், மாநிலங்களவையில் இது குறித்து விளக்கமளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டறியப்பட்டால், தங்கள் நாட்டினரை திரும்ப அழைத்துச் செல்வது அனைத்து நாடுகளின் கடமையாகும் என்று கூறினார்.
அதன்படி அமெரிக்கா மேற்கொண்டுள்ள நாடு கடத்தல் நடவடிக்கையை, குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்க ஆணையம் செயல்படுத்தி வருகிறது என்றும், அவ்வாறு அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு விலங்கு போடும் நடைமுறை 2012ம் ஆண்டு முதல் அமலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடு கடத்தப்படும் இந்தியர்கள் எந்த வகையிலும் தவறாக நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்காவிடம் கூறி இருப்பதாக தெரிவித்த மத்திய அமைச்சர் ஜெய் சங்கர், இந்தியர்களை சட்டவிரோதமாக அனுப்பிய ஏஜெண்டுகள் மற்றும் ஏஜென்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்குகள் போடப்பட்டதால் கழிவறைக்கு கூட செல்ல முடியவில்லை என்று அவர்கள் தங்களுடைய வேதனையை பகிர்ந்து கொண்டதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.