எழுத்தின் அளவு: அ+ அ- அ
வக்ஃப் திருத்த மசோதா 2024 மீதான கூட்டுக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
மக்களவை காலை கூடியதும் வக்ஃபு திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் ஒரு தலைப்பட்சமாக தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க கூடாது என முழக்கமிட்டனர். அமைதி காக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தியும் அமளி அடங்காததால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து 2 மணிக்கு அவை மீண்டும் கூடிய நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் வக்ஃப் அறிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்டம் நடத்தும் எம்.பி.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பரிந்துரைகளை அறிக்கையில் சேர்ப்பதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.
இதேபோல் மாநிலங்களவையிலும் வக்ஃப் மசோதா கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு திருப்பி அனுப்புமாறு மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரை காங்கிரஸ் எம்.பி.மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் உள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பரிந்துரைகள் எவையும் இடம்பெறவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அறிக்கையில் இருந்து எந்த நீக்கமும் செய்யப்படவில்லை என்றார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேவையற்ற பிரச்னையை உருவாக்குகிறார்கள் என்றும் ஜேபிசியின் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடந்த 6 மாதங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்றதாக குறிப்பிட்டார்.
இதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். ஆனாலும், அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கூறிய ஜெகதீப் தன்கர், கூச்சல் குழப்பம் இருந்தபோதிலும், அவை நடவடிக்கையை தொடர்ந்தார். ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இதனிடையே கடந்த 31-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவடைந்தது.
இதனிடையே புதிய வருமான வரி சட்ட மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச்சட்டம் கடந்த 1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட நிலையில், இவற்றில் அவ்வப்போது பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அதன்படி இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த பின் பேசிய நிர்மலா சீதாராமன், சிக்கலின்றி வருமான வரியை தாக்கல் செய்ய புதிய மசோதா வழிவகை செய்யும் எனவும் புதிய மசோதாவில் எளிமைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். இந்த மசோதா ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படடது.