எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் மாலத்தீவு ஒரு போதும் ஈடுபடாது என அந்நாட்டின் அதிபர் முகமது முய்ஸு தெரிவித்துள்ளார்.
5 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முய்ஸு, நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்தநிலையில், டெல்லியில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், இந்தியாவை மதிப்புள்ள பங்குதாரர் மற்றும் நண்பராக கருதுவதாகவும், பாதுகாப்பு உட்பட பல துறைகளில் ஒத்துழைப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
அதே நேரத்தில், தங்கள் நடவடிக்கைகள் நமது பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் கண்டிப்பாக இருப்போம் என மாலத்தீவு அதிபர் கூறினார். இந்திய சுற்றுலாப் பயணிகளை மீண்டும் மாலத்தீவு வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சீன ஆதரவாளராக கருதப்படும் முய்ஸு கடந்த ஆண்டு அதிபராக பொறுப்பேற்றவுடன் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்ற கெடு விதித்தார். அதன்படி வீரர்களும் திருப்பி அழைக்கப்பட்டனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை பலரும் புறக்கணித்தனர். இந்தநிலையில் சீன ஆதரவாளராக கருதப்படும் அவரது, இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது