மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா ஹேமந்த் சோரன் அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளன. பாஜகவை வீழ்த்தி இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்குமா?  என்பது குறித்து பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இம்முறை அங்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டன. அதேநேரம் காங்கிரஸ் தலைவர்கள் பெரியளவில் பிரச்சாரம் செய்யவில்லை என்றும், ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தனித்துவிடப்பட்டதாகவும் முணு முணுப்புக்கள் எழுந்தன. இந்தி ஹார்ட்லேண்ட் மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு 41 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும்.

ஜார்க்கண்டில் இப்போது ஜேஎம்எம் எனப்படும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மறுபுறம் எதிர்க்கட்சி வரிசையில் பாஜக உள்ளது. இரு தரப்புமே வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டன. அதேநேரம் இரு தரப்பு பிரச்சாரத்தில் நம்மால் ஒரு வேறுபாட்டைப் பார்க்க முடிந்தது. அதாவது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக சார்பில் நடந்த பல்வேறு பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் கலந்து கொண்டனர். ஆனால், ஆளும் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தலா 6 பிரச்சார கூட்டங்களில் மட்டுமே கலந்து கொண்டனர்....

என்னதான் ஹேமந்த் சோரன் தரப்புக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அதைப் பொதுவெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றே சொல்லலாம். ஹேமந்த் சோரனும் சரி, அவரது மனைவி கல்பனா சோரனும் சரி மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து, இருவரும் 90க்கும் மேற்பட்ட பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும் ஜார்க்கண்டில் பிரச்சாரம் செய்து இருந்தார்....

பணவீக்கம், வேலையின்மை மற்றும் எல்லைப் பாதுகாப்பு போன்ற உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப "பிளவு அரசியலை"  பாஜக பயன்படுத்துவதாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியிருந்தார். அதே வேளையில், இதர பிற்படுத்தப்பட்ட மக்களை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி பிரிக்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.

ஜார்க்கண்டில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் ஊடுருவல், நக்சல்கள் பிரச்சனை, ஜாரியாவில் வசிக்கும் உள்ளூர் மக்கள் நிலக்கரி சுரங்கத்தினால்  உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொள்வது உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. மேலும், ஆளும் அரசு அதிகாரிகள் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறை சென்றிருந்த நிலையில், இதனை முன்வைத்தே பாஜக தனது பிரச்சார யுக்தியை கையாண்டது.

இதனிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் இந்தியா கூட்டணி ஆட்சியை இழக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில், 41 தொகுதிகளை பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கலாம். அந்த வகையில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 42 முதல் 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு 25 முதல் 30 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 

எது எப்படியோ, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாவது முறையாக ஜேஎம்எம் கட்சி ஆட்சியை கைப்பற்றி வரலாறு படைக்குமா? அல்லது பாஜக தலைவர்களின் பிரச்சார யுக்தி கைகொடுக்காமா என்பது நாளைய தேர்தல் முடிவுகளில் தெரிந்து விடும்.

Night
Day