எழுத்தின் அளவு: அ+ அ- அ
மகாராஷ்டிர முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வானதையடுத்து மகாயுதிக் கூட்டணி, ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 188 தொகுதிகளில் ஆளும் மகாயுதிக் கூட்டணியில் பாஜக மட்டுமே 132 இடங்களைக் கைப்பற்றியது. ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வென்றன. இதையடுத்து அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது.
ஏக்நாத் ஷிண்டேதான் முதலமைச்சராகத் தொடர வேண்டும் என அவரது தரப்பு சிவசேனா வலியுறுத்தியது. ஆனால் கடந்த முறை உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அதிக இடங்களை வைத்திருந்தாலும் ஷிண்டேவிற்கு வழங்கிய முதலமைச்சர் பதவியை இம்முறை விட்டுக் கொடுக்க பாஜக தயாராக இல்லை. இதனால் டெல்லியில் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில், 11 நாள் சஸ்பென்சிற்குப் பிறகு முதலமைச்சர் பதவியை பாஜக கைப்பற்றியுள்ளது. அதன்படி மும்பையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் -ரூபானி தலைமையில் பாஜகவின் மையக் குழுக் கூட்டமும் தொடர்ந்து பாஜக சட்டமன்றக்குழுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உள்ளிட்டோர் கூட்டாக ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இந்த சந்திப்பின்போது நிர்மலா சீதாராமன் மற்றும் விஜய் ரூபானி ஆகியோரும் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், புதிய அரசின் பதவியேற்பு விழா நாளை மாலை 5.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும், ஏக்நாத் ஷிண்டே இந்த அரசில் இருக்க வேண்டும் என்பதே மகாயுதியின் விருப்பம் என்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.