எழுத்தின் அளவு: அ+ அ- அ
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக தனது 92வது வயதில் உயிரிழந்தார். நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பி என்று அழைக்கப்படும் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்த செய்திக்குறிப்பை தற்போது காணலாம்.
ஒன்றுபட்ட இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தின், கா எனும் கிராமத்தில் கடந்த 1932ஆம் ஆண்டு பிறந்த மன்மோகன் சிங், 1957-ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். ஐக்கிய நாடுகள் அவையின் வர்த்தக மேம்பாட்டுக்கான பிரிவில், கடந்த 1966 முதல் 1969ஆம் ஆண்டு வரை, பணியாற்றிய இவர், டெல்லி பொருளாதாரப் பள்ளியில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் 1971ல் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக இருந்த மன்மோகன் சிங், 1972ல், நிதி அமைச்சகத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
1982 முதல் 1985 வரை ரிசர்வ் வங்கி ஆளுநராக பணியாற்றிய மன்மோகன் சிங், 1985 முதல் 1987 வரை திட்டக்குழு துணைத் தலைவராக இருந்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 1991-96ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் மன்மோகன் சிங் மிக முக்கிய பொருளாதார நிபுணராக அறியப்பட்டார்.
இந்தியப் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்தில் மன்மோகன் சிங் எடுத்த சில முக்கியமான முடிவுகள் இந்திய பொருளாதாரத்தின் போக்கையே மாற்றியமைத்தன.
2004 முதல் 2014ம் ஆண்டு வரை இரண்டு முறை இந்தியாவின் பிரதமாராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். பிரதமராக பதவி வகித்த பத்தாண்டு காலக்கட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், மகளிருக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் சட்டம், கல்வி பெறும் உரிமைச்சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என பலவற்றுக்கு வித்திட்டார். இந்தியா - அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தமும் மன்மோகன் ஆட்சியில் கையெழுத்தானது.
சைலன்ட் பிரதமர், பொம்மை பிரதமர், பலவீனமான பிரதமர், சோனியா காந்தி கட்டுப்பாட்டில் இயங்கும் பிரதமர் என்ற விமர்சனங்களை பாஜக, அவர் மீது வைத்திருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பின்போது தான் யாருக்கும் ஒரு போதும் அஞ்சியதில்லை என பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
மேலும் மன்மோகன் சிங் எப்போதெல்லாம் ஒரு திட்டம் கொண்டு வருகிறாரோ அப்போதெல்லாம் இந்திய பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் கருத்துக்களை முன்வைத்தார்.
ஏற்கெனவே இதயநோயால் பாதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்று நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நினைவிழந்த நிலையில் மயக்கத்துடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி மன்மோகன் சிங் தனது 92வது வயதில் காலமானார்.
நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பி என்று அழைக்கப்படும் மன்மோகன் சிங் மறைவுக்கு அரசியல் கட்சி மற்றும் உலக நாட்டுத் தலைவவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.