எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையில் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகனுடன் துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் மும்பை பாந்திரா கிழக்கு நிர்மல் நகர் அருகே உள்ள அவரது மகன் சீசன் சித்திக் அலுவலகத்திற்குச் சென்ற பாபா சித்திக், பின்னர் அங்கிருந்து காரில் ஏறி சென்றுள்ளார். பாபா சித்திக்கை பின்தொடர்ந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரது காரை சுற்றி பட்டாசுகளை வெடிக்க செய்து, காரில் இருந்த சித்திக் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் வயிறு மற்றும் மார்பில் குண்டுகள் பாய்ந்த பாபா சித்திக் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மும்பை போலீசார், அவரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பாபா சித்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடியவர்களில் 2 பேரை கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் அரியானாவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
பாபா சித்திக்கின் இந்த படுகொலைக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆம் ஆத்மி கட்சியின் பிரீத்தி சர்மா உட்பட பலரும் கண்டனமும், அதிர்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.