முல்லை பெரியாறு - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடும், கேரளாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பது பள்ளிக் குழந்தைகள் சண்டை போடுவது போல் உள்ளதாக என உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

முல்லைப் பெரியாறு அணை அருகே மரங்களை வெட்டுவது உட்பட சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை கேரள அரசு ரத்து செய்ததாகக் கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என். கோடீஸ்வர் சிங் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. 

கேரளாவின் உண்மையான நோக்கம் அணையை இடிக்க வேண்டும் என்பதுதான் என்றும் அதற்காக அனைத்துத் தொல்லைகளையும் கேரளா அரசு கொடுப்பதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அணை குறித்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு தவிர்ப்பதாக கேரள தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு ஏதாவது செய்தால், கேரளா பேரழிவிற்கு உள்ளாகி விடும் என சிலர் மிகைப்படுத்தி பிரச்சாரத்தை உருவாக்கியுள்ளதாக கருத்துத் தெரிவித்தனர். இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழு, ஒரு வாரத்திற்குள் கூடி, இரு மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உரிய தீர்வு காண இயலாவிட்டால், இன்றிலிருந்து நான்காவது வாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் நீதிமன்றமே இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காணும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Night
Day