மேற்கு வங்கம் - ரயில் விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலி !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். 

அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சீல்டாவிற்கு கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் இன்று சென்று கொண்டிருந்தது. மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் நியூ ஜல்பைகுரி பகுதியில் ரங்கபாணி ரயில் நிலையம் அருகே ருய்தாசா என்ற இடத்தில் அந்த ரயில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சரக்கு ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு  கவிழ்ந்தன. மோதிய வேகத்தில் விரைவு ரயிலின் கடைசி 3 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. இதில் ஒரு பெட்டி, சரக்கு எஞ்சினின் மேல் ஏறி அந்தரத்தில் தொங்கியது. 

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ள நிலையில், 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சிக்னலை மீறி சரக்கு ரயில் சென்றதால் இந்த விபத்து நடந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே, ரயில் விபத்து அதிர்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சம்பவ இடத்துக்கு மருத்துவர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்திருப்பதாக தெரிவித்தள்ளார். மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து கொண்டிருப்பதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

விபத்து குறித்து தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், துரதிர்ஷ்டவசமாக நடந்துள்ள இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் அங்குள்ள நிலைமை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

நிலைமையை நேரில் ஆய்வு செய்ய சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ள ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.  இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே துறை சார்பில் தலா 10 லட்சம் ரூபாயும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா இரண்டரை லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.


Night
Day