யோகா மூலம் உலகம் முழுவதையும் ஆரோக்கியமாக்க இந்தியா விரும்புகிறது - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகம் முழுவதும் யோகா மற்றும் பாரம்பரிய மருத்துவம் குறித்த ஆர்வம் அதிகரித்து வருவதாகவும் யோகா மூலம் உலகம் முழுவதையும் ஆரோக்கியமாக்க இந்தியா விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

'மன் கி பாத்' எனப்படும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் 120வது பதிப்பில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சர்வதேச யோகா தினத்திற்கு இன்னும் 100-க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் 2025-ம் ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் 'ஒரு பூமிக்கு ஒரு ஆரோக்கியம்' என வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஏராளமான இளைஞர்கள் யோகா மற்றும் ஆயுர்வேதத்தை சிறந்த நல்வாழ்வு ஊடகமாகக் கருதி அவற்றை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

மழைத்துளிகளைப் பாதுகாப்பதன் மூலம், வீணாகாமல் நிறைய தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் பல பகுதிகளில் நீர் பாதுகாப்பிற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார் கடந்த 7-8 ஆண்டுகளில், புதிதாக கட்டப்பட்ட தொட்டிகள், குளங்கள் மற்றும் பிற நீர் மறுசீரமைப்பு கட்டமைப்புகள் மூலம் 11 பில்லியன் கன மீட்டருக்கும் மேல் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை நெருங்கி வரும் நிலையில், புதிய பொழுதுபோக்கை கற்றுக் கொள்வதற்கும், தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வதற்கும் குழந்தைகளுக்கு இதுவே சரியான நேரம் என்றார். ஏதேனும் ஒரு அமைப்பு, பள்ளிகள், சமூக நிறுவனம் அல்லது மையங்கள் கோடைகால முகாம்களை ஏற்பாடு செய்தால், அதை #MYHOLIDAYS உடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். 

Night
Day