எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரம்ஜானை ஒட்டி கொல்கத்தா நகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களும், பாஜகவினரும் ஒன்று சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். தனது அரசு வன்முறைகளை கட்டுப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், பெரும்பான்மையினரின் கடமை, சிறுபான்மையினரை பாதுகாப்பதுதான் என்றும் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள ஜமா மசூதியில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர்,
உலகின் சில பகுதிகளில் அமைதியின்மை நிலவுவதாக குறிப்பிட்டார். காஸா பகுதியில் நடைபெறும் தாக்குதல் வேதனையளிப்பதாக தெரிவித்தார். சகோதரத்துவம் மற்றும் அமைதி நிலவ வேண்டும் என்றும் நம் நாட்டில் அனைவரும் அன்பு மற்றும் அமைதி, நல்லிணக்கதுடன் வாழ வேண்டும் என தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சிறப்பு தொழுகையில் கலந்து கொள்ள சென்ற சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் கூடும் பகுதிகளில் ஏராளமான தடுப்புகளை காவல்துறையினர் வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். பாஜக அரசியல் சட்டப்படி நாட்டை ஆட்சி செய்யவில்லை என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.