ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், நாட்டின் செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும் என்று பிரதமர் மோடி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதியில் 12 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு முடிந்துள்ளது. எஞ்சிய 13 தொகுதிகளுக்கு 2ம் கட்டமாக வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அந்த மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா பகுதியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது பேசிய பிரதமர், காங்கிரஸ் கட்சி முன்பு ஆட்சியில் இருந்த போது, தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கே முன்னுரிமை இருக்கிறது என்று சொன்னதாகக் கூறினார். ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகள் பெற்றெடுப்பவர்களுக்கும் இந்த செல்வத்தை அவர்கள் பகிர்ந்து அளிக்கப் போகிறார்கள் என்பதே அதன் பொருள் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்துகள் ஊடுருவியவர்களுக்கு போக வேண்டுமா என்றும், இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற நகர்ப்பற நக்சல் சிந்தனை கொண்டவர்கள், தாய்மார்கள், சகோதரிகளாகிய உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்க மாட்டார்கள் என்றும், அந்த எல்லைக்கு கூட அவர்கள் செல்வார்கள் என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடியின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசிய 22 விநாடி வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதர் மோடியின் பேச்சு, நாட்டில் நிலவும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் வகையில் இருப்பதாக இந்தியா கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது.