எழுத்தின் அளவு: அ+ அ- அ
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இந்திய விமானப்படையின் தேஜஸ் இலகுரக போர் விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் அருகே உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜஸ் விமானத்தில் விமானி ஒருவர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் திடீரென குடியிருப்பு ஒன்றின் மீது கீழே விழுந்து தீப்பிடித்தது. எனினும் பாராசூட் மூலம் குதித்து விமானி பத்திரமாக உயிர் தப்பினார்.
1984ஆம் ஆண்டு முதல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் தேஜஸ் இலகுரக போர் விமானம் இது வரை விபத்தில் சிக்கியது இல்லை.
இந்நிலையில் 23ஆண்டுகளில் முதல் முறையாக தற்போது தேஜஸ் இலகுரக போர் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹாக் பயிற்சி விமானம் மேற்கு வங்கம் அருகே விபத்தில் சிக்கிய நிலையில், தற்போது தேஜஸ் போர் விமானமும் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.