ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முப்படை வீரர்களின் போர் ஒத்திகையை பார்வையிட்டார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட ராணுவ தளவாடங்களின் செயல்திறனை வெளிக்காட்டும் விதமாக, ராஜஸ்தானில் முப்படைகள் நடத்திய பிரம்மாண்ட ஒத்திகையை பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து பிரதமர் மோடி பார்வையிட்டார். 

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 'பாரத் சக்தி' என்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், முப்படைகள் சார்பில் 50 நிமிடங்களுக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட ஒத்திகைப் பயிற்சியை, பிரதமர் நரேந்திர மோடியுடன் 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

இந்த ஒத்திகையில், கடற்படை ஏவுகணைகள், விமானப்படை தேஜஸ் இலகுரக போர்விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள், டேங்கர்கள் உள்பட பல்வேறு ராணுவ உபகரணங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மட்டுமின்றி இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் ராணுவ ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.  

இதேபோல, கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், சரக்கு கப்பல்கள் மற்றும் வான்வழியில் இலக்குகளை தாக்கும் விமானங்கள், இலகுரக ஹெலிகாப்டர்கள் இந்த ஒத்திகையில் காட்சிப்படுத்தப்பட்டது. துல்லியமான வழிகாட்டும் ஏவுகணை, தகவல் தொழில்நுட்ப அமைப்பு, தானியங்கி ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு அமைப்பு போன்ற சில புது தொழில்நுட்பங்களும் பரிசோதிக்கப்பட்டன. மேலும், டி90 ரக ரேங்கர்கள், தனுஷ் மற்றும் சாரங் போர் துப்பாக்கி அமைப்புகள் போன்றவையும் மேம்படுத்தப்பட்ட வான்வழி போர் சாதனங்கள் ஒத்திகையில் இடம்பெற்றன.

உலக நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட இடத்தில், விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல், ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் உள்ளிட்ட சோதனைகள் நிகழ்த்தப்பட்டது காண்போரை பிரமிக்க வைத்தது. 

Night
Day