எழுத்தின் அளவு: அ+ அ- அ
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் சிக்கிய 14 பேரில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 8 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கோலிஹான் சுரங்கத்திற்கு கொல்கத்தாவை சேர்ந்த ஊழல் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் 14 பேர் ஆய்வு மேற்கொள்ள சென்றனர். அப்போது, அவர்கள் சென்ற லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த, லிப்ட் சுமார் 577 மீட்டர் ஆழத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. லிப்டில் கொல்கத்தா தலைமை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி உப்பேந்தர் பாண்டே, கேத்ரி காப்பர் காம்ப்ளக்ஸ் பிரிவு தலைவர் ஜி.டி.குப்தா மற்றும் கோலிஹான் சுரங்கத்தின் துணை பொது மேலாளர் ஏ.கே.சர்மா உள்ளிட்ட 14 பேர் சிக்கினர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தில் சிக்கிய 6 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது.