இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய முடிவுகளை பாஜக அரசு எடுத்துள்ளதாகவும், சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் கொண்டதாக நாடு இருந்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், கடந்த 5 ஆண்டுகள் இந்திய நாட்டில் சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றத்தை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 17-வது மக்களவை கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். கொரோனா காலத்திலும் இந்தியாவின் வளர்ச்சி தடைபடவில்லை என்றும், உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பெருந்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உருமாறியுள்ளது எனக்கூறிய பிரதமர், தொழில்நுட்ப வளர்ச்சி, முதலில் சிலருக்கு சிரமமாக இருந்தாலும், பிறகு அனைவருக்கும் பயனுள்ளதாக மாறியுள்ளதாக குறிப்பிட்டார். மக்களவையில் தங்களது பங்களிப்பை செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றிகூறிய பிரதமர், சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் கொண்ட நாடாகா 5 ஆண்டுகளில் இந்தியா இருந்துள்ளதாக தெரிவித்தார். நடப்பு 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கிடைத்துள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு சவாலானது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். நடப்பு கூட்டத்தொடரில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும் இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது என்றும், ஜி20 மாநாட்டை நடத்தி உலகின் கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது என்றும் அவர் கூறினார்.