எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்ற மாநிலங்களவையில் விடிய விடிய நடைபெற்ற விவாதத்துக்கு பின்னர் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. இரு அவைகளிலும் நிறைவேறியதை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந் நிலையில் மாநிலங்களவையில் நேற்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இதன் மீது 15 மணி நேரத்துக்கு மேலாக விவாதம் நடைபெற்றது. நள்ளிரவு இரண்டு மணி வரை நடைபெற்ற விவாதத்துக்கு பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது.
வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்த போது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனிடையே நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இரு அவைகளிலும் நிறைவேறியதை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட உள்ளது.
முன்னதாக இந்த வக்ப் வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். வக்பு மசோதாவில் மக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ குற்றம் சாட்டினார்.