வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. வயநாடு மாவட்டத்தில் நேற்று இரவு 30 சென்டி மீட்டருக்கும் அதிகமாக பெய்த கனமழையின் காரணமாக மேப்பாடி, முண்டக்கை, வைத்திரி, சூரல்மலா, வெள்ளரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் 500க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், பள்ளி கூடங்கள் மண்ணில் புதைந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சூரல்மலா பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்த முகாமும் நிலச்சரிவில் சிக்கியதால், 200க்கும் அதிகமானோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மீட்புப் பணிகளில் உதவ கண்ணூர் பாதுகாப்புப் படையின் 2 குழுக்கள் வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்து சாலைகள் துண்டிக்கபட்டுள்ளதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியா விமானப்படையின் எம்.-ஐ-17 மற்றும் ஹெச்.ஏ.எல் துருவ் ஹெலிகாப்டர்கள் மூலம் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள சூரல்மலா பகுதியில் மீட்பு நடவடிக்கைகளில் ராணுவம் களமிறங்கியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே வயநாடில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த காளிதாஸ் என்பவர் உயிரிழந்தார். தற்போது பிரேத பரிசோதனைக்காக வயநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் காளிதாஸின் உடலை சொந்த ஊர் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பகுதியளவு உடல் மண்ணில் புதையுண்டு சிக்கி தவித்த நபரை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கயிறு மூலம் பாதுகாப்பாக மீட்டனர். மீட்கப்பட்ட நபரை முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே வயநாடு சூரல்மலா பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவரை பேரிடர் மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர். அப்போது மீட்கப்பட்ட பெண்ணுக்கு மீட்புக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் ஒன்றான சூரல்மலா பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் இணைந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்த பாலம் உடைந்ததால் கயிறு மூலம் மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். தற்போது மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது

நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழையையும் பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து வசதி இல்லாததால் பல்வேறு சிரமங்களை பேரிடர் மீட்புக்குழுவினருக்கு சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் பல்வேறு இன்னல்கள் மத்தியிலும் ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை ட்ரோன் உதவியுடன் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி மீட்பவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சூரல்மலையில் தற்காலிக முகாம்கள் அமைத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனிடையே நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான சூரல்மலையில் கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் இயற்கை பேரிடர் எனவும் இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. வயநாடு பகுதிகளான மேப்பாடி, முண்டக்கை, சூரல்மலா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.




Night
Day