வயநாடு நிலச்சரிவு- உயிரிழப்பு 162ஆக அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 2வது நாளாக இன்றும் மீட்புப் பணி தொடர்கிறது.

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. வயநாடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 30 சென்டி மீட்டருக்கும் அதிகமாக பெய்த கனமழையின் காரணமாக மேப்பாடி, முண்டகை, வைத்திரி, சூரல்மலா, வெள்ளரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் 500க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், பள்ளி கூடங்கள் மண்ணில் புதைந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சூரல்மலா பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்த முகாமும் நிலச்சரிவில் சிக்கியதால், 200க்கும் அதிகமானோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. 400-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் நிலச்சரிவிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 143 உடல்களுக்கு பிரேத பரிசோதனை நிறைவு பெற்றுள்ளதாகவும், 83 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கேரள அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 2வது நாளாக இன்றும் மீட்பு நடவடிக்கைகளில் ராணுவம் களமிறங்கியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 90க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

Night
Day