எழுத்தின் அளவு: அ+ அ- அ
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பார்வையிட்டார். கடுமையான பாதிப்புக்குள்ளான சூரல்மலையில் நடந்து சென்று ஆய்வு செய்த மோடி, பாதிப்பு விவரங்களை மீட்பு படையினரிடம் கேட்டறிந்தார்.
கடந்த மாதம் 30ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் கன மழை பெய்ததை அடுத்து கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டகை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள் மண்ணில் புதைந்து இருக்கும் இடம் தெரியாமல் போயின. நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வயநாட்டையே புரட்டிப் போட்ட இந்த நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், காணாமல் போன 153 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 11 நாட்களுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கண்ணூர் வந்த பிரதமரை, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்த ஹெலிகாப்டரில் வயநாடு சென்ற பிரதமர் மோடி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ததை தொடர்ந்து, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் மோடி நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடைபெற்றுவரும் மீட்பு பணிகள் மற்றும் பாதிப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பிரதமர் மோடி ஆய்வு செய்த போது, மத்திய இணை அமைசசர் சுரேஷ் கோபி, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து சூரல்மலை பகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்ட பாலத்துக்குப் பதிலாக, ராணுவத்தினர் 31 மணி நேரத்தில் அமைத்த புதிய பாலத்தில் நடந்து சென்று பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது மீட்பு பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்த பிரதமர் மோடியிடம், சேத விவரங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.