எழுத்தின் அளவு: அ+ அ- அ
2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சரவம்பில் மாற்றமில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வருமான வரி சலுகை அறிவிக்கப்படுமா என மாதச் சம்பளம் பெறும் கோடிக்கணக்கான சாமானிய மக்கள் எதிர்பார்த்த நிலையில், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சரவம்பில் மாற்றமில்லை என அறிவித்தார். அதன்படி, வருமான வரியில் நிலையான கழிவு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், 4 கோடி பேர் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவார்கள்.
புதிய வருமான வரியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின்படி ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் ஊதியத்திற்கு வரி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு ஊதியத்திற்கு 5 சதவீதம் வரியும், 7 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு ஊதியத்திற்கு 10 சதவீதம் வரியும், 10 லட்சத்து 1 ரூபாயிலிருந்து 12 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு ஊதியத்திற்கு 15 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த நிதியாண்டை போலவே தற்போது 12 லட்சத்தில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு ஊதியத்திற்கு 20 சதவீதம் வரியும், 15 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் பெறுவோருக்கு 30 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் மீதான கார்ப்பரேட் வரியை குறைத்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தற்போது 40 சதவீதமாக உள்ள கார்ப்பரேட் நிறுவன வரி 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்டார்ட் அப் நிறுவனம், சந்தை மதிப்பை விட அதிக முதலீடுகளை பெற்றால் விதிக்கப்படும் ஏஞ்சல் வரி முழுவதும் ரத்து செய்யப்படுவதாக பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்தார்.