எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜார்க்கண்டில் தனது தலைமையிலான புதிய அரசு வரும் 28-ம் தேதி பதவியேற்க உள்ளதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, ஆளுநர் சந்தோஷ் கங்வாரை, முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முதலில் தனது ராஜினாமாவை ஆளுநரிடம் சமர்ப்பித்ததாகவும், தொடர்ந்து இந்தியா கூட்டணியின் புதிய அரசு அமைப்பதற்கு உரிமை கோரியதாகவும் தெரிவித்தார். தன்னுடன் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள பொறுப்பாளர்களும் உடன் வந்ததாக கூறிய ஹேமந்த் சோரன் வரும் 28-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத் காந்த் சஹாய், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணித் தலைவராகவும் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கான ஆதரவுக் கடிதங்கள் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான இந்தியா கூட்டணி 56 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதில் அவரின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களிலும், கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 இடங்களிலும், சிபிஐ-எம்எல் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அங்கு 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.