எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்கான தடைகளை தகர்க்க ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி,
டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி,
2047ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்று உறுதிபட கூறினார்.
நாட்டின் வளர்ச்சிக்கான தடைகளை தகர்க்க ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை இந்த நேரத்தில் போற்றுவதாக கூறிய பிரதமர் மோடி, விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடமை பட்டுள்ளோம் என்று தெரிவித்த மோடி,
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், உறவினர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இந்த தேசம் துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
உள்ளூர் குரல் பிரச்சாரத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், சிறு, குறி தொழிலாளர்களின் குரல் மந்திரமாக மாறியுள்ளாதவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
உள்ளூர் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பால் ஒவ்வொரு மாவட்டமும் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்களில் 10 கோடி பெண்கள் சுதந்திரமாக வருவாய் ஈட்டி வருவதாக கூறினார்.
வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது 140 கோடி மக்களின் கனவு என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் 75 ஆயிரம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் உருவாக்கப்படும்.
மேலும், வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, அங்கு மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்.