எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் முரண்பாடு விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், அது குறித்து வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் கருத்துகளை அனுப்பலாம் என தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் காணப்பட்ட முரண்பாடே பாஜக கூட்டணி வெற்றிக்குக் காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியலில் முரண்பாடு இருப்பதாக திரிணாமுல் காங்கிரசும் புகார் தெரிவித்தது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தினார்.
இந்தநிலையில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், வாக்காளர் பட்டியல் பதிவு அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நிலையில் ஏதாவது தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருந்தால் அதுகுறித்து அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்துக்கு வரும் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் ஆலோசனை வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், சட்டப்படி தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க வருமாறு கட்சிகளின் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.