வாக்கு சதவிகிதங்களில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை - தேர்தல் ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இதுவரை நிறைவடைந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவுகளில் பதிவான வாக்குசதவீத நிலவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முழுமையாக வெளியிட்டுள்ளது.
 
நாட்டில் நடைபெறும் 7 கட்ட மக்களவைத் தேர்தலில் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி மே 20ம் தேதி வரை 5 கட்ட வாக்குப்பதிவுகள் இதுவரை நிறைவடைந்துள்ளன. இதில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவின் வாக்கு சதவீத இறுதி நிலவரங்கள் 11 நாட்களுக்கு பிறகு வெளியிடப்பட்ட நிலையில் அடுத்தடுத்த கட்டங்களின் முடிவுகளும் இதே போன்று காலதாமதமாக வெளியிடப்பட்டது. இது தொடர்பாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் வாக்கு சதவீத நிலவரங்களில் 5 சதவீத வித்தியாசங்கள் இருப்பதாகவும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இதனிடையே இதுவரை நிறைவடைந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவுகளில் பதிவான வாக்கு சதவீத நிலவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முழுமையாக வெளியிட்டுள்ளது. அதில் எந்த மக்களவைத் தொகுதி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குகளை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, அதன் சதவீதம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதங்களில் எந்த மாற்றங்களும் நிகழ வாய்ப்பில்லை என விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம் , ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு சதவிகிதத்தை ஒப்பிட்டுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. 

Night
Day