வாரிசுருட்டி இழுத்துச் சென்ற வெள்ளம்... ஒரே குடும்பத்தினர் உயிரிழந்த சோகம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் அவர்கள் அடித்து செல்லப்பட்ட மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. குடும்பத்துடன் சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு ...

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் லோனவாலா பகுதியில் உள்ள புஷி அணைக்கு பின்புறத்தில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் இந்த அணையும், நீர்வீழ்ச்சியும் பிரபலமான சுற்றுலாத்தளங்களாகும். பருவமழையை ரசிக்கவும், நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழவும், புனே நகரில் உள்ள சய்யாத் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுமிகள் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பேர் ஞாயிற்றுக் கிழமை நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். 

லேசான மழை தூறலுக்கு மத்தியில் நிலவிய குளுமையான சூழலில் 5 பேரும் நீர்வீழ்ச்சியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அடுத்து தங்களுக்கு நேரப்போகும் துயரத்தை அறியாதவர்களாய் நீர்வீழ்ச்சியில் அவர்கள் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர்.

அவர்களின் மகிழ்ச்சிக்கு முடிவு கட்டும் வகையில் எமனாக வந்தது வெள்ளம். அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நீர்வீழ்ச்சியில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அதிகரித்து ஓடிய வெள்ளத்தை சற்றும் எதிர்பாரத அவர்கள், அதில் சிக்கி தத்தளித்தனர்.

நீர்வீழ்ச்சியின் நடுவே தத்தளித்த அவர்கள், ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு சமாளித்துப் பார்த்தனர். அவர்களின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவர, அவர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. எவ்வளவோ சமாளித்துப் பார்த்தும், நீர்வீழ்ச்சியில் சிக்கியவர்களால் சீறிப்பாய்ந்த நீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

நீர்வீழ்ச்சியில் சீறிப்பாய்ந்த வெள்ளம், சிக்கிக் கொண்ட 5 பேரையும் அப்படியே வாரி சுருட்டி இழுத்துச் சென்றது. எவ்வளேவோ முயன்றும் அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை. கரைக்கும் திரும்பும் அவர்களுடைய முயற்சி தோல்வியில் முடிய, வேறுவழியின்றி அனைவரும் வெள்ளம் சென்ற பாதையில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது.

மீட்பு படையினர் வருவதற்குள் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் 36 வயதான சாஹிஸ்தா அன்சாரி, 13 வயது அமிமா அன்சாரி, 8 வயது உமிரா அன்சாரி ஆகியோரின் 9 வயது மரியா சய்யாத் உள்ளிட்டோரின் உடல்கள் நீண்ட போராட்டத்திற்குப்பிறகு ஒவ்வொன்றாக மீட்பு படையினரால் மீட்கப்பட்டன. 

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அசம்பாவிதங்களை தடுக்க அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Night
Day