எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் 2 நாள் பயணமாக நேற்று சென்றிருந்த பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இன்று காலை நாடு திரும்பினார். விமான நிலையத்திலேயே பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் எல்லையில் மேலும் தீவிர கண்காணிப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு , அடுத்த கட்ட நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனிடையே, பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். கோழைத்தனமாக தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் செயலில் இந்தியாவுக்கு முழு ஆதரவை அமெரிக்க வழங்கும் என உறுதியளித்தார். பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து போராடும் என்றும் ட்ரம்ப் தெரிவித்ததாக இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.