விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொடரும் பதற்றத்திற்கிடையே, மத்திய அரசுடன் இன்று மாலை நடைபெற உள்ள பேச்சுவார்த்தை முடியும் வரை  எல்லைகளில் உள்ள தடுப்புகளை தாண்டிச் செல்ல முயற்சிக்க மாட்டோம் ன விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி டெல்லி நோக்கி பேரணி என வடமாநில விவசாய சங்கங்கள் அறிவித்தன. இதையடுத்து அவர்களுடன் மத்திய அரசு 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் சுமுக முடிவு எட்டப்படாததால், அறிவித்தபடி 13-ம் தேதி டெல்லி நோக்கி டிராக்டர்களில் விவசாயிகள் படையெடுக்கத் தொடங்கினர்.

இதையடுத்து  டெல்லியில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் டெல்லியை ஒட்டிய ஹரியானா எல்லையில் கண்டெய்னர்கள், காங்கிரீட் தடுப்புகள் ஆணிப் பலகை என பல்வேறு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினமும் நேற்றும் போலீஸாரின் தடுப்புகளை மீறிச் செல்ல முற்பட்ட விவசாயிகள் மீது ஹரியானா போலீஸார் ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கலைக்க முயற்சித்தனர்.

மேலும் விவசாயிகளின் செவித்திறனை பாதிக்கும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக சத்தம் எழுப்பியும் கூட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், விவசாயிகள் அரசு தங்களுக்கு எதிராக ஏவி விடும் கண்ணீர் புகை குண்டுகளை சுமந்து வரும் ட்ரோன்களுக்கு பதிலடியாக பட்டங்களைப் பறக்க விட்டு அதிபுத்திசாலி அதிரடி பதிலடி கொடுத்தனர். இதன்மூலம்
ட்ரோன்களின் காத்தாடிகளில், பட்டங்களின் மாஞ்சா நூலைச் சிக்க வைத்து அவற்றை செயலிழக்கச் செய்தனர். 


மேலும் கண்ணீர் புகை குண்டுகளில் இருந்து தப்பிக்க நவீன வாயுக் கவசம் உள்ளிட்டவை அணிந்து தடுப்புகளை மீறி டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறியதால் பதற்றம் அதிகரித்தது. மேலும், கண்ணீர் புகை குண்டுகளில் இருந்து சருமங்களை பாதுகாக்க முல்தானி மெட்டி போன்றவற்றை பூசிக்கொண்டு முன்னேறி வருகின்றனர். தொடர்ந்து, கண்ணீர் புகை குண்டுகளில் இருந்து வரும் புகையை கட்டுப்படுத்த சாக்குப்பைகளை பயன்படுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இதையடுத்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்தது. 

அதன்படி இன்று மாலை சண்டிகரில் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கத் தலைவர் சர்வன் சிங் பாந்தர், தங்களுக்கு கிடைத்த செய்தி மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் அழைப்பின்அடிப்படையில், சங்கங்களில் உள்ள அனைவரிடமும் பேசி, இன்று அமைதியாக இருப்போம் என்றார். 

மாலை 5 மணிக்குத் தொடங்கும் பேச்சுவார்த்தை முடியும் வரை தங்கள் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இருக்காது எனக் கூறினார். அதேநேரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருமா அல்லது வலுப்பெறுமா என்பது தெரிய வரும்.

Night
Day