எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வழக்குகளில் தீர்ப்பு மாற்றி வழங்குவதற்காக நீதிபதி பணம் வாங்கினாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வரும்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட நீதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த யஷ்வந்த் வர்மா, கடந்த 2021ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
ஹோலி தினத்தன்று இவர் வசிக்கும் வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அப்போது தீயை அணைக்க சென்ற தீயணைப்புத்துறையினர் மற்றும் காவலர்கள் தீயை அணைத்தனர். பின்னர் வீட்டின் மற்ற அறைகளில் தீ பரவி உள்ளதா என சோதனை நடத்தியபோது, அறை ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து உச்சநீதிமன்ற கொலிஜியத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவசர ஆலோசனை நடத்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜியம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. இருப்பினும், நீதிபதி ஒருவரே நீதி தவறி இருந்தால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொலிஜியம் உறுப்பினர்கள் பரிதுரைத்துள்ளநிலையில், அதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.