எழுத்தின் அளவு: அ+ அ- அ
விடிய விடிய பெய்த கனமழையால் தலைநகர் டெல்லியே தண்ணீரில் தத்தளித்து வருகிறது.
டெல்லியில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்ததால், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், டெல்லியில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகயில் தண்ணீர் குளம்போல தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை பெய்து வருவதால், நொய்டா செக்டார் 95 பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரில், இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மின்டோ சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை மழைநீர் சூழ்ந்தது. சுரங்கப்பாதையை கடக்க முயன்ற கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கியது.
இதேபோல், மின்டோ சாலையில் உள்ள மற்றொரு சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரில் கனரக லாரி ஒன்று சிக்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இடுப்பளவு மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கனமழையால் சாந்தி பாதை பகுதியில் உள்ள பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கனமழையால் தலைநகரில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், பிகாஜி காமா மெட்ரோ ரயில் நிலைய பகுதியை முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கியுள்ள நிலையில், மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மெக்ராலி - பதர்பூர் சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வேலைக்கு செல்வோர் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ள நீரில் நடந்து செல்வதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
டெல்லியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி அரசை கண்டித்து பாஜக கவுன்சிலர் ஒருவர் சிறிய படகில் அடையாள போராட்டம் நடத்தினார். மாநகராட்சியினரின் அலட்சியத்தாலும், பருவமழைக்கு முன் வடிகால்களை சுத்தம் செய்யவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.