எழுத்தின் அளவு: அ+ அ- அ
பஹல்காமில் தாக்குதல், எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூடு போன்றவை காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு சூழல் குறித்து
ஸ்ரீநகர் சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி ஸ்ரீநகர் இன்று சென்றார். பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார். காஷ்மீரிலும், எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ராணுவ உயர் அதிகாரிகள், உபேந்திர திவேதியிடம் விளக்கம் அளித்தனர். உதம்பூர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ராணுவ தளபதி ஆய்வு செய்ய உள்ளார்.
இதனிடையே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ராணுவ தளபதி உபேந்திர திவேதி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்ளூர் ராணுவ அதிகாரிகள், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பயங்கரவாத தடுப்பு படையினர் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.