எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஹரியானா சட்டசபை தேர்தலில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 9 புள்ளி 53 சதவீத வாக்குகள் பதிவுவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹரியானா அரசின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் மொத்தம் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3வது முறை ஆட்சியை பிடிக்க பாஜகவும், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளன. மாநிலம் முழுவதும் தேர்தல் நடைபெறும் 90 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
20 ஆயிரத்து 629 வாக்குப்பதிவு மையங்களில், காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்வதற்காக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினரும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. காலை 9 மணிநிலவரப்படி 9 புள்ளி 53 சதவீத வாக்குகள் பதிவுவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று மாலை இரு மாநிலங்களுக்குமான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. ஹரியானாவில் இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளுடன் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.