'இந்தியா கொடுத்தது 'புத்தா', யுத்தா அல்ல'

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த இரு நாட்டு மக்களின் பங்களிப்பும் அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். விரைவில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளில் முதல் மூன்று இடத்தில் இந்தியா வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மரை மோடி சந்தித்தார். பின்னர் தலைநகர் வியன்னாவில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய மோடி, 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு வந்திருப்பதாகவும் இரு நாடுகளும் 75 ஆண்டு கால நட்புறவை கொண்டாடும் சமயத்தில் இந்த நிகழ்வு நடந்திருப்பதாகவும் கூறினார். 

அண்மையில் இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியதாக தெரிவித்த மோடி. இந்த தேர்தலில் 65 கோடிக்கும் மேற்பட்டோர் பேர் வாக்களித்தாக கூறினார். 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு கட்சி தொடர்ந்து மூன்று முறையாக ஆட்சியில் இருக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய மோடி, கொரோனாவுக்கு பிறகு உலகம் முழுவதும் அரசியல் நிலையற்ற தன்மை காணப்பட்டதாகவும், ஒரு அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது சவாலாக இருந்த நிலையில், இந்திய மக்கள் தம் மீதும் தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதாக கூறினார். 

இரு நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது அரசுகளால் மட்டும் உருவாவதில்லை என்பதே தனது கருத்து என்று கூறிய பிரதமர் மோடி, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்று கூறினார். இந்தியா எப்போதும் யுத்தத்தை கொடுத்ததில்லை மாறாக புத்தரை கொடுத்துள்ளது, அதாவது அமைதியையும் வளர்ச்சியையுமே வழங்கி வந்துள்ளதாக மோடி தெரிவித்தார்.

தற்போது இந்தியா 8 சதவீத வளர்ச்சி என்ற அளவில் வளர்ந்து கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்த மோடி, இந்த வேகத்தில் சென்றால் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடங்களை இந்தியா விரைவில் பிடித்து விடும் என்று கூறினார்.  அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு தேவையான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

Night
Day