'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா மக்களவையில் நாளை அறிமுகப்படுத்தப்படாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற செயலகம் இன்று வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட பட்டியலின்படி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான மசோதா மக்களவையில் நாளை அறிமுகப்படுத்தப்படாது எனத் தெரியவந்துள்ளது. 

எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து அரசியலமைப்பு 129-வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட மக்களவை நிகழ்ச்சிப் பட்டியலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நாளை இந்த மசோதா தாக்கலாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வெளியான பட்டியலில் அந்த மசோதாக்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் மசோதாக்களை அறிமுகம் செய்வதை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவுக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

அதேநேரத்தில், திங்கள்கிழமை அட்டவணையில் இருந்து அவை நீக்கப்பட்டாலும், சபாநாயகரின் அனுமதியுடன் 'நிகழ்ச்சித் துணைப் பட்டியல்' மூலம் சட்ட முன்மொழிவுகளைக் கொண்டு வருவதற்கான திட்டத்தையும் மத்திய அரசு வைத்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவில் மத்திய அரசின் திடீர் தாமதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.  

Night
Day