எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் லக்கி பாஸ்கர் படத்தை பார்த்துவிட்டு, அதில் வரும் கதாநாயகன் போல பணம், வீடு, கார் ஆகியவற்றை சம்பாதித்து திரும்புவதாக நண்பர்களிடம் கூறிய 4 மாணவர்கள், விடுதியில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை பார்த்து அதற்கு அடிமையாகி தப்பி ஓடிய மாணவர்களை, போலீசார் மீட்டது எப்படி என்பது குறித்து பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்....
லக்கி பாஸ்கர் படத்தை பார்த்து, அந்த படத்தின் பாதிப்பால் மாணவர்கள் விடுதியில் இருந்து தப்பி செல்லும் காட்சிகள் தான் இவை. வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் 111 கோடிக்கும் மேல் வசூலை குவித்த இந்த திரைப்படம், தற்போது நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் 4 மாணவர்கள் அண்மையில் லக்கி பாஸ்கர் திரைப்படத்தை பார்த்துள்ளனர். அந்த படத்தில் வரும் கதாநாயகன் லக்கி பாஸ்கர், பணம், கார், வீடு ஆகியவற்றை மிக எளிதில் சம்பாதிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
அக்காட்சியால் ஈர்க்கப்பட்ட 4 மாணவர்கள் தாங்களும் லக்கி பாஸ்கரை போல் எளிதில் பணம், வீடு, கார் ஆகியவற்றை சம்பாதித்த பின் மீண்டும் இங்கு வருவோம் என்று சக நண்பர்களிடம் கூறி, பள்ளி விடுதியில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பள்ளி மாணவர்கள் நான்கு பேர் மாயமானது பற்றி, விடுதி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் நான்கு மாணவர்களையும் தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, கையில் இருந்த பணம் எல்லாம் செலவான நிலையில், விஜயவாடா ரயில் நிலையத்தில் இருந்த 4 மாணவர்களையும் செவ்வாய்க்கிழமை இரவு மீட்ட போலீசார் விசாகப்பட்டினம் அழைத்து சென்று அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய வயதில் சினிமா காட்சியால் ஈர்க்கப்பட்ட 4 மாணவர்கள் பள்ளி விடுதியில் இருந்து தப்பியோடிய சம்பவம் ஆந்திராவை அதிரச் செய்துள்ளது. இனி வரும் காலங்களிலாவது பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என்பதை பெற்றோர் கவனமுடன் கண்காணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது....