எழுத்தின் அளவு: அ+ அ- அ
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினருடனான கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தியா தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல், அதனை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினர் உடனான பிரம்மாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடிக்கு ஆடல் பாடலுடன் இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா அமெரிக்கா இடையேயான நட்புறவு உலக நன்மைக்கானது எனவும், ஐடி துறையில் இந்தியா கால் பதிப்பதாகவும் தெரிவித்தார். உலகின் முக்கிய பல்கலைக்கழங்கள் இந்தியாவை நோக்கி வரத் துவங்கியுள்ளதாக கூறிய பிரதமர், விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்கள் அமெரிக்க சந்தைகளில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
பசுமை ஆற்றல் உற்பத்தியில் இந்தியா முதன்மையாக விளங்குவதாகவும், உலகில் உள்ள நாடுகளில் இந்தியாதான் குறைந்த அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதாகவும் கூறினார். பாரிஸ் தட்பவெப்ப கொள்கையை முதலில் இந்தியாதான் நிறைவேற்றி உள்ளதாகவும், உலக அமைதியை பாதுகாப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
விரைவில் இந்தியாவில் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, 2036ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.