14 திருத்தப் பரிந்துரைகளுடன் வக்ஃப் வரைவு மசோதா அங்கீகரிப்பு - நாடாளுமன்ற கூட்டுக்குழு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கிடையே, பதினான்கு திருத்தங்கள் பரிந்துரையுடன் வக்ஃப் திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு அங்கீகரித்துள்ளது.

இறை பணிக்காக இஸ்லாமியர்கள் வழங்கிய சொத்துகளை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வக்ஃப் வாரியங்கள் நிா்வகித்து வருகின்றன. அதனை முறைப்படுத்தும் வகையில், வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியப் பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாத இரண்டு  உறுப்பினா்களை நியமிப்பது, வாரிய நிலங்களை ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட 40 திருத்தங்களுடன் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இந்த சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான குழுவில் 31 பேர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு பலமுறை கூடி மசோதா குறித்து விவாதித்தது. இதில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும், ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கும் கடும் வாக்குவாதம் தொடர்ந்தது. 

இந்தநிலையில் குழுவின் 36-வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதிலும் எதிர்க்கட்சிகள் கடும் மோதலில் ஈடுபட்டன. மசோதாவில் 44 திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அவை மற்ற எம்.பி.க்களால் நிராகரிக்கப்பட்டு, 14 திருத்தங்களுடன் வக்ஃப் மசோதாவிற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து இந்த திருத்த மசோதாவை மத்திய அரசு விரைவில் அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day