2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. 

காங்கிரஸ் தலைமையிலான ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், கடந்த 2011ம் ஆண்டில் திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும், மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதேபோல், மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தினேஷ் குமார் சர்மா முன் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே மாதம் முதல் 2ஜி முறைகேடு வழக்கின் விசாரணை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2ஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day