எழுத்தின் அளவு: அ+ அ- அ
உத்திரபிரதேசத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக அம்மாநில சட்டமன்றத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில வாரங்களாகவே வட மாநிலங்களில் கன மழை பெய்து வருவதால், பெரும்பாலான பகுதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை மற்றும் அதி கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம் மாநிலத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன் படி மாநில தலைநகர் லக்னோவில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக நகரின் மையப்பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில சட்டமன்றத்துக்குள் தண்ணீர் புகுந்தது. உடனடியாக அங்கிருந்த பணியாளர்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி விறு விறுவென நடைபெற்றது. அதே போல், பிரயாக்ராஜ் பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள் ஜார்ஜ் டவுன் காவல் நிலையத்தை தண்ணீர் சூழ்ந்தது.
இதனினிடையே சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஷிவ்பால் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் மாநில சட்டமன்றத்துக்கு அதிக பட்ஜெட் தேவை என்றும் சட்டமன்றத்துக்கே இந்த நிலை என்றால், மாநிலத்தின் மற்ற பகுதிகள் நிலை என்னவாக இருக்கும் என பதிவிட்டு வேதனையடைந்தார்.