2024 மக்களவை தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 96.88 கோடி என்றும் இது, 2019 மக்களவை தேர்தலை விட 6 சதவீதம் அதிகம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் இறுதி எண்ணிக்கை 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 என்றும், இதில் ஆண் வாக்காளர்கள் 49 கோடியே 72 லட்சத்து31 ஆயிரத்து 994 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண் வாக்களார்கள் எண்ணிக்கை 47 கோடியே15 லட்சத்து 41 ஆயிரத்து 888 பேர் எனவும், மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 44 பேர் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
18-19 வயதுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்து 81 ஆயிரத்து 610 எனவும், 80 வயதை கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 85 லட்சத்து 92 ஆயிரத்து 918 ஆகவும் 100 வயதை கடந்துள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 791 பேர் உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது 100 பேரில் 66.76 சதவீதம் பேர் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் இறுதியாக நடைபெற்ற 2019 மக்களவை தேர்தலில் 89.6 கோடி பேர் வாக்களிக்க பதிவு செய்திருந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலுக்கு 96.8 கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும், கடந்த மக்களவைத் தேர்தலை ஒப்பிடும்போது நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 6 சதவீத வாக்காளர்கள் அதிகமாக பதிவு செய்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.