2024-25 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற மோடி அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தாக்கல் செய்ய உள்ளார். தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு, தொழில்துறையை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் போன்றவை பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத் தொடரின் 2ம் நாளான இன்று, 2024-25ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆண்டுகள் போல, இந்த முறையும் காகிதமில்லா முறையில் டிஜிட்டல் வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அதை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய சமூகம், பொருளாதாரம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடுத்தர மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ள, தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு, 80 சி பிரிவின் கீழ் வழங்கப்படும் வருமான வரி விலக்கு ஆகியவை அதிகரிக்கப்படுவதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பு, வருவாய் அதிகரிப்பு தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், பல்வேறு வரி சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, தொழில் மற்றும் வேளாண் துறையை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day