எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடு முழுவதும் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்தலாம் என குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக்குழு தலைவரும் முன்னாள் குடியரசு தலைவருமான ராம்நாத் கோவிந்த் அறிக்கை சமர்பித்துள்ளார்... அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்...
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பில் திருத்தங்களை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்ய மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும் அக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நடத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்ட 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் 50 சதவீத மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரே வாக்காளர் அடையாள அட்டையை தயாரிக்கவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளாது.
ஒரே தேர்தல் அடையாள அட்டையை தயாரிக்க ஒட்டுமொத்த மாநிலத்தின் 50 சதவீத ஒப்புதல் அவசியம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்றாவது கட்டமாக தொங்கு சட்டசபை, நம்பிக்கையில்லா தீர்மானம் போன்றவற்றால் ஆட்சி இழப்பு நேர்ந்தால் இடைத்தேர்தலை நடத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய, தேர்தல் ஆணையர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், தேர்தல் பணியாளர்கள் மற்றும் தேர்தல் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரும் 2029ஆம் ஆண்டிலேயே ஒரே சமயத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது...