எழுத்தின் அளவு: அ+ அ- அ
3-வது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் மோடி, கடந்து வந்த பாதை குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
கடந்த 1950-ம் ஆண்டு குஜராத் மாநிலம் வாட்நகரில், தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி - ஹீராபென் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் தான் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. சிறுவயதில் தனது தந்தைக்கு உதவியாக ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனையில் ஈடுபட்டார் மோடி.
பள்ளி பருவத்தில் வாட்நகரில் மேல்நிலை கல்வியை முடித்த நரேந்திர மோடி, சிறு வயதிலிருந்தே மக்கள் மற்றும் தேச சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1970-ஆம் ஆண்டு தனது 20-வது வயதில், ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் இணைந்து பணியாற்றிய மோடி, 1971-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார்.
அவரது பணி மிக சிறப்பாக இருந்ததால் 1985-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். மூலம் பாஜகவிற்கு அனுப்பப்பட்ட நரேந்திர மோடி, 1987ம் ஆண்டு பாஜகவின் குஜராத் பிரிவிற்கு ஒருங்கிணைப்பு செயலாளராக தேர்வானார்.
1990-ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் அத்வானியின் ராம ரத யாத்திரையையும், 1991-92-ஆம் ஆண்டு முரளி மனோகர் ஜோஷியின் எக்தா யாத்திரையையும் ஒருங்கிணைக்க மிக முக்கிய நபராக செயல்பட்டவராக மோடி திகழ்ந்தார்.
1995-ம் ஆண்டுகளில் பாஜக தேசிய செயலாளராக தேர்வான மோடி, புதுடெல்லிக்கு அனுப்பப்பட்டு, ஹரியானா மற்றும் இமாச்சலப்பிரதேச தேர்தல் பிரசாரங்களுக்கு தலைமை வகித்தார். 1996-ல் பாஜகவின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் மோடி.
கடந்த 2001-ஆம் ஆண்டு, குஜராத் முதலமைச்சராக பதவி வகித்த கேசுபாய் பட்டேலின் உடல்நிலை குன்றியதால், பாஜக தேசிய தலைமை பட்டேலுக்கு பதில் மோடியை குஜராத் முதலமைச்சராக நியமித்தது. அதன் பின்னர் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் குஜராத் ராஜ்கோட் தொகுதியில், காங்கிரஸின் அஸ்வின் மேத்தாவை 14 ஆயிரத்து 728 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார் மோடி.
2002-ம் ஆண்டு மணிநகர் தொகுதியில் காங்கிரஸின் ஒஷா யதின்பாய் நரேந்திரகுமாரை 38 ஆயிரத்து 256 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து, 2-வது முறையாக முதலமைச்சரானார் மோடி.
அதனைத்தொடர்ந்து 2007-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மணிநகர் தொகுதியில் காங்கிரஸின் தின்ஷா படேலை தோற்கடித்து 3-வது முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்றார்.
இதன் மூலம் 2 ஆயிரத்து 63 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து, குஜராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார் மோடி.
கடந்த 2012-ஆம் ஆண்டு மீண்டும் மணிநகர் தொகுதியில் வெற்றிபெற்று 4-வது முறையாக முதலமைச்சரானார் மோடி. அந்த தேர்தலில் பாத் ஸ்வேதா சஞ்சீவை 34 ஆயிரத்து 97 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
நரேந்திர மோடி ஆட்சிக்காலத்தில் குஜராத்தில் மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதாக அவரது பொருளாதார கோட்பாடுகள் பரவலானப் பாராட்டுக்களைப் பெற்றன.
அதன் பின் 2014-ல் தனது பதவியை ராஜினாமா செய்த நரேந்திர மோடி, மக்களவை தேர்தலில் அவரது சொந்த மாநிலமான குஜராத்திலுள்ள வடோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள வாரணாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி கண்டார்.
குஜராத் அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்த நரேந்திர மோடி, அதன் மூலம் குறுகிய கால கட்டத்திலேயே கட்சியில் மூத்த தலைவர்களை ஓரம் கட்டி மிகவும் சக்திவாய்ந்த நபராக மாறினார். அதுவே அவரை பாரத பிரதமராகவும் ஆக்கியது. நாட்டின் 14-வது பிரதமராக 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி மோடி பதவியேற்றார். அதன் பின்னரே நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபராக மாறினார் பிரதமர் நரேந்திர மோடி.
அக்டோபர் 2014 முதல் தொடர்ந்து நாட்டு மக்களுடன் வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார்..
2019 மக்களவைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஷாலினி யாதவ், காங்கிரசை சேர்ந்த அஜய் ராய் ஆகியோரை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, 2019 மே மாதம் 30-ஆம் தேதி, இந்தியப் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
கட்சியின் சாதாரண பொறுப்பில் இருந்து தனது கடின உழைப்பால் படிப்படியாக மேலே வந்த நரேந்திர மோடி, உலகளவில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவராகவும் உருவெடுத்தார்.
இதற்கிடையே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக அரியணை ஏறியுள்ளார். இதன்மூலம், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப்பின் தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்று சரித்திரம் படைத்துள்ளார் நரேந்திர மோடி