எழுத்தின் அளவு: அ+ அ- அ
நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
இருநாட்டு சுற்றுப் பயணங்களின் முதல் கட்டமாக பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அந்நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற உள்ள ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து, மார்சே நகரில் நடைபெற உள்ள இந்தியாவின் புதிய துணை தூதரக தொடக்க விழாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளனர்.
பின்னர் இருவரும் சர்வதேச வெப்ப அணுக்கரு உலை அமைந்துள்ள பகுதிக்கு சென்று அதனை நேரில் பார்வையிடுகின்றனர். தொடர்ந்து முதலாம் உலக போர் மற்றும் 2ம் உலக போரில் கலந்து கொண்டு உயிர் நீத்த இந்திய வீரர்களுக்காக மஜார்குவெஸ் நகரில் உள்ள போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
இதையடுத்து பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 12ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக ஏராளமான இந்தியர்கள் அண்மையில் நாடு கடத்தப்பட்ட சூழ்நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இதனிடையே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா-பிரான்ஸ் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அதிபர் மேக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும் மார்சே நகரில் இந்தியா புதிய தூதரகத்தை திறக்க உள்ளதாகவும் கூறிய அவர், அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு இந்தியா-அமெரிக்கா நட்பை மேலும் உறுதிப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.