45 இந்தியர்கள் உடல்களுக்கு அஞ்சலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் கொச்சி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு தனித்தனியே அஞ்சலி செலுத்தப்பட்டன. பின்னர் ஆம்புலன்ஸ்-கள் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

குவைத் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அகமதி மாகாணம் மங்காப் நகரில் உள்ள 6 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 7 பேர் மற்றும் கேரளாவை சேர்ந்த 23 பேர் உட்பட 45 இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. ராமநாதபுரத்தை சேர்ந்த ராம கருப்பண்ணன், செஞ்சியை சேர்ந்த முகமது செரீப், கடலூரை சேர்ந்த சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, கோவில்பட்டியை சேர்ந்த வீராசாமி மாரியப்பன், பேராவூரணியை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய், சென்னையை சேர்ந்த சிவசங்கர் மற்றும் திருச்சியை சேர்ந்த எபமேசன் ராஜூ உள்ளிட்டோர் உயிரிழந்தது உறுதியானது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் உடனடியாக குவைத் விரைந்தார். அந்நாட்டின் துணை பிரதமரை சந்தித்து பேசி, அங்கு உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை விமானம் மூலம் இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய ராணுவ விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டன.

கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இந்தியர்களின் உடல்களை மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் பெற்று கொண்டனர். பின்னர் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் அனைவருக்கும்அஞ்சலி செலுத்தினர். தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களுக்கு தமிழக அரசு சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டன.

இந்நிலையில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 31 உடல்களை தனித்தனி ஆம்பலன்ஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மற்ற இந்தியர்களின் உடல்கள் அதே விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.


Night
Day