8 மாதங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் பயணம் மேற்கொள்ளும் சுனிதா வில்லியம்ஸ், பூஜ் வில்மோர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, தரை இறங்கிய போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னணி இடங்களை வகிக்கும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை நடத்தி வருகிறார். அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் ப்ளு ஆர்ஜின் என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வரும் நிலையில், எதிர்காலம் இனி விண்வெளியில் விரியும் என்ற எதிர்பார்ப்புடன் உலகில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளன. 

அதன் வகையில் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் சமீப காலமாக விண்வெளி ஆராய்ச்சியில் இறங்கி ஸ்டார் லைனர் சிடி 100 என்கிற விண்கலத்தையும் வடிவமைத்து உருவாக்கியது.

இதனை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி அங்கிருந்து மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் திட்டத்தில், கடந்த ஜூன் 5-ம் தேதி இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரரான புஜ் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வெற்றிகரமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் தன்னுடன் கொண்டு சென்ற மீன் குழம்பை சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி விண்வெளி வீரர்களுடன் பகிர்ந்து சாப்பிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 

திட்டமிட்டபடி அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் எட்டு நாட்கள் கழித்து பூமிக்கு திரும்ப வேண்டும். அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்ட போது தான் பிரச்சனைகள் தொடங்கியது. அவர் சென்ற ஸ்டார் லைனர் விண்கலத்தில் பல்வேறு எந்திர கோளாறுகள் இருப்பது முதல் கட்ட ஆராய்ச்சியில் தெரியவந்தது. அதன் காரணமாக அவர்கள் விண்வெளியில் தங்கி இருக்கும் காலம் நீட்டிக்கப்பட்டு ஸ்டார் லைனர் விண்கலத்தை சரி செய்யும் பணிகள் நடைபெற்றன.

ஒரு கட்டத்திற்கு மேல் ஸ்டார் லைனர் விண்கலத்தை சரி செய்யவே முடியாது என்ற சூழல் ஏற்படவே சுனிதா வில்லியம்ஸ் வெறும் 8 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்ற நிலையில், தற்போது 8 மாத காலமாக அங்கு தங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டார் லைனர் விண்கலம் மட்டும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பயணித்த சுனிதா வில்லியம்ஸும், பூச் வில் மோரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பூமிக்கு திரும்ப முடியும் என்ற நிலையில் அங்கேயே தங்கியுள்ளனர்.

ஏற்கனவே சர்வதேச விண்வெளி மையத்தில் ஏழு விண்வெளி வீரர்கள் தங்கி இருக்கும் நிலையில் சுனிதா வில்லியம்ஸும், பூஜ் வில் மோரும் அங்கேயே உள்ளதால் தற்போது மொத்தம் ஒன்பது விண்வெளி வீரர்கள் அங்கு தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு, சுவாசிக்க ஆக்சிஜன் போன்றவை உள்ளதா?  என்ற கேள்விக்கு சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி உள்ள விண்வெளி வீரர்களுக்கு தேவையான பொருட்கள் கடந்த மாதம் இரண்டு ஆளில்லா சரக்கு விண்கலன்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் தேவையான அளவிற்கு கூடுதலான பொருட்கள் விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதால், உணவு மற்றும் சுவாசக் காற்றில் எந்தவித சிக்கலும் இருக்காது என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Byte : தா.வி வெங்கடேசன், முதுநிலை விஞ்ஞானி

நீண்ட நாட்களாக புவி ஈர்ப்பு விசை இல்லாத சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி இருப்பதால் சுனிதா வில்லியம்ஸ்க்கு உடல் நலக்கோளாறு ஏதேனும் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திரள் ஏவ் என்ற விண்வெளி வீரர், 371 நாட்கள் திட்டமிடப்படாமல் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை நினைவு கூர்கின்றனர் அறிவயலாளர்கள்..

மேலும் 1994 முதல் 1995 வரை 437 நாட்கள் 18 மணி நேரம் ரஷ்யாவின் விண்வெளி வீரரான வளாரி பழியக்கோ நீண்ட நாட்கள் விண்வெளியில் இருந்து சாதனை படைத்ததாகவும், ஆகவே சர்வதேச விண்வெளி மையத்தில் 8 மாதங்களாக சுனிதா வில்லியம்ஸ் தங்கி இருப்பதால் அவர் உடலுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என்றும் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கு, 2025 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்படும் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பூஜ் வில்மோர் ஆகிய இருவரையும் பூமிக்கு பத்திரமாக அழைத்து வருவதற்கான திட்டத்தில் நாசா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Night
Day