எழுத்தின் அளவு: அ+ அ- அ
புதுச்சேரியில், தனியார் வேனில் பள்ளிக்கு சென்று வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த வேன் ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
நையினார்மண்டபத்தை சேர்ந்த தனியார் வேன் ஓட்டுநரான சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், நாள்தோறும் வேனில் மாணவிகளை பள்ளியில் விடுவதும் மாலை அழைத்து வருவதுமாக இருந்துள்ளார். இந்நிலையில் வேனில் பயணித்த 9 ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவியை, சுபாஷ் சந்திரபோஸ் ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே மாணவியை தனியாக அழைத்து சென்ற சுபாஷ் சந்திரபோஸ் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறதது.
இதனால் அதிர்ந்து போன மாணவி, மறுநாள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்து மாணவியிடம் விசாரித்த நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேன் ஓட்டுநர் சுபாஷ்சந்திரபோஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.